SELECTED PROSE

விரல் (Viral)

தகரக் கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச் சாரலாகக் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ?

பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப் போகிறாள்? கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரியக் கரண்டியால் கலக்கிவிட்டு, ஒரு சொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப் பார்த்தான் பாவாடை.

உப்பு கொஞ்சம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றவே, அரக்கப் பரக்க இரண்டு உருளைக் கிழங்கை வெட்டி சுத்தம் செய்து, கொஞ்சம் பொடிசாக வெட்டி சாம்பாரில் போட்டான். இடைப்பட்ட நேரத்தில்பெரட்டிவைத்திருந்த கோபிஸ் கீரையை, ‘டப்பர்வேரில்போட்டு மூடினான். ஒரு கட்டு அப்பளப்பூவைப் பொரித்து எடுத்தான். அதையும்மூடி போட்ட டின்னில்  பத்திரப்படுத்துவதற்குள், சாம்பார் கொதித்துவிட்டது. இப்போது உப்பு சரியாக இருந்தது. உப்பு கூடிப்போனால் உருளைக்கிழங்கை வெட்டிப் போட்டால் சரியாகிவிடும் என்பதுகண்டெய்னரில்உடன் வசிக்கும் தோழர்கள் சொல்லிக்கொடுத்த பாடம்

சாம்பார்ப் பாத்திரத்தைத் துணியால் பிடித்து இறக்கி வைத்ததோடு சமையல் வேலை முடிந்து விட்டதுசாம்பார், கறி, கோபிஸ் கீரை பிரட்டல், பொரிச்ச அப்பளப்பூ......இதைவிட சொர்க்கம் உண்டா?

ஊரில் இருந்தவரை ஒரு நாளாவது குசினிப்பக்கம் போயிருப்பானா? ஆத்தா வாகட்டும், ‘கட்டிக் கொண்டு வந்த பொன்னுத்தாயி ஆகட்டும், ஒருநாள் கூட அந்த அனுபவத்தைப் பாவாடைக்குக் கொடுத்ததில்லை. ஆனால் இங்கு சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வாங்கும் சொல்ப சம்பளத்துக்குசுயம்பாகம்தான். இந்தச் சாப்பாடே அமிர்தம் தான்! மாசக்கடைசியில்தான் கோழி வாங்குவார்கள். மதியம் சுடச்சுட பொன்னி அரிசிச் சோற்றில் ஊரே மணக்கும் கோழிக்கறியும், தயிரில் போட்ட வெள்ளரிக்காய் பச்சடியும் அப்பளமுமாய் ஒரு பிடி பிடித்தால் நாக்கும், மனசும் சொக்கிப் போகும்

சாப்பாடு முடிந்த கையோடுதேக்காவுக்குப் போனால், ஊர்க்கார நண்பர்கள் பலரையும் அங்குதான் சந்தித்து மகிழ்வான். சனி, ஞாயிறுகளில் பாவாடையைப் போலவே, தமிழ்நாட்டிலிருந்து வந்த பலருக்கும் தேக்காத் திடல், தேக்காக் கடைத் தெரு, தேக்காவின் முக்கு மூலை என சிராங்கூன் சாலை முழுவதும் நிரம்பிவழியும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவுவது போல் சந்தோஷம் வேறில்லை. என்னமோ தமிழ்நாட்டையே பார்க்கும் மகிழ்ச்சியில் மண் பாசத்தோடு அன்போடு பேசிக் கொள்வார்கள். கையில் காசிருந்தால், நண்பர்களைப் பார்த்துவிட்டு, எல்லோருமாகச் சேர்ந்து, புதிதாக ரிலீசாகியிருக்கும் ஏதாவது ஒரு தமிழ்சினிமாவுக்குப் போவார்கள்

பின்னே? இங்கே நமக்கு யாரிருக்கிறார்கள்? ஒட்டா.... உறவா? கூப்பிட்டுக் குலாவவும், குசலம் விசாரிக்கவும், அன்போடு ஒரு வாய் சோறுபோடவும், இது என்ன எங்கூரா? விரக்தியில் அவ்வப்போது பாவாடை ஊரை நினைத்து ஏங்குவான்.

காலையில் கண்ணைப்பிட்டுக் கொண்டதுமே, எதையாவது வயிற்றுக்குப் போட்டுவிட்டு, தங்குமிடத்துக்கு அருகிலேயே உள்ள, பெரிய பெரிய ராட்சதமெஷின்கள் நிற்கும் கட்டுமானத்தளத்துக்குப் போய், வேலையைத் தொடங்கினால், மதியம் சாப்பாட்டுக்காகத்தான்வெல்டிங் மெஷினிலிருந்து நிமிர்வான்

கசங்கிய உடையும், வியர்வை நாற்றமுமாய், கைகளைக் கழுவிக்கொண்டு பொட்டலத்தைப் பிரித்தால் கேண்டீன் சாப்பாடு. சில சமயம் பொரிச்சமீன் அல்லது கோழித்துண்டு என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் யானை விலைதான் கண்ணை எரித்தது. இதில் தவ்வு பொரிச்சது, தெம்பே சம்பால், கங்கொங் கீரை, போன்ற சிங்கப்பூர் அயிட்டங்களை அவனால் சாப்பிடவே முடியவில்லை. பேசாமல் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வெறும் குழம்பும் சோறுமாய் சாப்பிட்டுவிட்டு எழவேண்டிய நிலை. இதனால்தான், தலையே போனாலும் பிறகு கேண்டீன் பக்கம் பாவாடை தலை வைத்துப் படுக்கவில்லை. இதற்கு ஒரு ரசமாவது வைத்து விட்டால் ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பாட்டுக் கடையை முடித்துவிடலாம். மாலை 5 மணிக்கு மேல் கிடைத்தால்ஓவர்டைம்செய்வான். இரவு வேலை முடிந்து வருவதற்குள்கண்டெய்னர்நண்பர்கள் சமைத்து வைத்திருப்பார்கள்

குளித்து, சாப்பிட்டுவிட்டு, கைத்தொலைபேசியில் காசிருந்தால், பொன்னுத்தாயிக்குப் போன் செய்வான். பொன்னுவுக்கு இதுதான் மாசம். பெரிய பயலுக்கும் மூணு வயசாகப்போகுது. கையடிபட்டு ஊருக்குப் போனப்ப எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தும், வேண்டாம் வேண்டாம்னு மனசுக்குள்ள நினைச்சாலும் ஆண்டவன் சித்தம் வேறாக இருந்தது

பொன்னுவின் மெத்தென்ற உடம்பும், ‘மாமாஎன்றகொஞ்சும் விளிக்கும் முன்னே, பாவாடையும் சராசரி மனிதன் தானே? ‘எல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான்என்று பொன்னுத்தாயிக்கு ஆறுதல் சொன்னாலும், இந்தக் குழந்தை வயிற்றில் தங்கியதிலிருந்தே, பொன்னு படாத பாடுபடுகிறாள். மூத்த பயலுக்கு, பாவாடை கூடவே இருந்தான்; பொன்னுவுக்கு வாய்க்குப் பிடிச்சதையெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிப் போட்டான்; ஆத்தாவும் வக்கணையாய் சமைத்துப் போட்டு பார்த்துக்கிட்டதில் ஏப்பைசாப்பையில்லாமல், புலிக்குட்டி மாதிரி ஒரு பயலைப் பெத்துப் போட்டாள் பொன்னுத்தாயி

ஆனால் இப்போது, ஆத்தாவுமில்லை. மாமியார் தான் வீட்டையும் மகளையும் பார்த்துக்கொள்கிறார். மாமனார் என்னதான் பொன்னுத்தாயிக்கு அப்பாவாக இருந்தாலும், பாவாடை மாசாமாசம் காசு அனுப்பினால் தான் அங்கு அடுப்பு எரியும் நிலை. எல்லாவற்றையும்விட வயிற்றுச்சுமையையும் உடலியலாமையையும் கூட மறந்து, “நீங்க எப்படி மாமா இருக்கீங்க? சாப்பிட்டீங்களா மாமா? என்னப்பத்தி கவலைப்படாதீங்க மாமா, நீங்க உங்க உடம்பைப் பாத்துக்குங்க மாமாஎன்று மூச்சுக்கு முந்நூறு மாமா போட்டு பரிவோடு பொன்னு உருகும் போதே நெகிழ்ந்து நெக்குருகிப்போய் நிற்பான் பாவாடை. அக்கணமே ஓடிப்போய் மனைவியைக் கட்டிக்கொள்ள மாட்டோமா என்று அவ்வளவு தாபமாய் இருக்கும். ஆனால் இந்தியா என்ன கிட்டத்திலா இருக்கு, நினைச்சவுடனேயே ஓடிப்போய் வருவதற்கு? திருச்சிக்கு அந்தண்டை உள்ள ஒரு குக்கிராமத்துவாசியான தான் கடல் கடந்துவந்ததே பெரிய விஷயம்.

ஆனால் சிங்கப்பூருக்கு வருவதற்காகப் பொன்னுத்தாயியின் தாலிக்கொடி தவிர்த்து, அத்தனையும் விற்றும் கூட ஏஜண்டுக்காசுக்குச் சாப்பாடு போடும் நிலத்தையே ஒத்திக்குக் கொடுத்துவிட்டுத்தான் வரவேண்டியிருந்தது. சாப்பாட்டுக்கும், சொல்ப செலவுக்கும், மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சக்காசை அப்படியே ஊருக்கு அனுப்பிவிடுவான். மருத்துவச்சி அம்மா சொன்னடானிக்குகளையெல்லாம் மாமனார் வாங்கிக் கொடுப்பதாகப் பொன்னு கூறினாள். என்றாலும் சதா வீங்கிய காலும், வாடிய முகமுமாய் நடமாடும் பொன்னுத்தாயியின் நினைப்பு தான் பாவாடைக்கு. ஒரு வருஷமாய் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று முக்கி முனகி எப்படியோஏஜண்டுக் கடனைக் கட்டியாச்சு!

இனி ஒத்திக்கு வச்ச நிலத்தையும் மீட்கணும். அதற்காகக் கிடைத்தஓவர் டைமையெல்லாம் செய்தான். அப்படியும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத குறையாக, செலவு தலைக்குமேல் போய்க்கொண்டிருந்தது

அந்த நேரத்தில் தான் இந்த விபத்து நடந்துவிட்டது. உயிர் போகும் வலியில், ரத்தவெள்ளத்தில் விரல்முனை துண்டிக்கப் பட்டு மருத்துவமனையில் கிடந்தான் பாவாடை. நினைவு வந்தபோது, அழுதழுது அவனுக்குத் தொண்டை கட்டிக் கொண்டது.

© Kamaladevi Aravindan. Transcribed by Khaanchennah Gangadaran.

by Kamaladevi Aravinda
from Nuval (2010)
published by Nivethitha Puthaga Poonga

BIOGRAPHY >